தமிழ்த் திரட்டி - அறிமுகம்


அறிமுகம்


தமிழ்த் திரட்டி -  தமிழ் வலைப்பதிவுகளை திரட்டும் ஒரு புதிய திரட்டியாக உருவாக்கப்பட்டிருக்கிறது.  


2007லிருந்து 2012 வரை வரையிலான 5 ஆண்டுகள் இணையத்தில் தமிழ்ப் பதிவுகள் உச்சத்தில் இருந்த காலம் எனலாம். 6000க்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகள் (Blogs) இருந்தன. பெண்கள், அயல் நாடுகளில் பணிபுரிந்தவர்கள், புதியவர்கள் என பெரும் திரளாய் எழுதவும்,  வாசிக்கவும், உரையாடவுமாக இருந்த காலம்.   


மொபைலில் உடனுக்குடன் பகிரவும், எளிதாக தொடர்பு கொள்ளவும் சாத்தியமான சமூக வலைத்தளங்கள் அதிகமாக புழக்கத்திற்கு வந்த பிறகு வலைத்தளங்களிலும்,  வலைப்பக்கங்களிலும் வெளிவந்த வலைப்பதிவுகள் குறைந்து போயிருக்கின்றன.  


ஸ்மார்ட் போன் அறிமுகமாகி, ஃபேஸ்புக் புழக்கத்திற்கு வந்த பிறகு பிளாக் எனப்படும் வலைப்பதிவர்களின் காலம் களையிழந்து போக ஆரம்பித்தது. தொடர்ந்து வாட்ஸ் அப், இன்ஸ்டா என படையெடுக்கவும் , பிளாகர்கள் குறைந்து போனார்கள். தமிழ்மணம் போன்ற திரட்டிகள் நின்று போயின. பிளாகர்களின் காலம் மங்கிப் போனது. பழங்கதையாய் ஆனது.  


இப்போதும் சிலர் விடாமல் எழுதிக்கொண்டுதான்  இருக்கின்றனர்.ஃபேஸ்புக், இன்ஸ்டா போன்றவை பெரும்பாலும், நுனிப்புல் மேய்வதைப் போல இருக்கின்றன என்று,  ஆழ்ந்த வாசிப்புக்கும், எழுத்துக்கும் வலைப்பக்கங்களே சரியானவை என பிளாகில்அவர்கள் முனைப்போடு எழுதுகின்றனர். பெரும்பாலும் அவை டைரி எழுதுவது போலாகி விடுகிறது. முன்னைப் போல் அவரவர்க்கென்ற வாசகர்கள் இருக்கிறார்களா, எழுதும் பதிவுகள் அவர்களுக்குச் சென்றடைகிறதா என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.  


இவையெல்லாவற்றையும் கவனத்தில் கொண்டுதான், தமிழ்த் திரட்டி ஆரம்பிக்கப்படுகிறது. முன்னைப்போல் பிளாகர் காலத்தை மீட்டு எடுத்து விடலாம் என்றெல்லாம் எந்தக் கனவுமில்லை, கருதவுமில்லை.  


வலைப்பக்கங்களில் எழுதிக்கொண்டு இருப்பவர்கள் மீதும், அந்த வலைப்பக்கங்கள் மீதும் ஒரு குறைந்தபட்ச கவனத்தையாவது ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் விருப்பம். 


யார் யாரெல்லாம் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள், என்ன எழுதுகிறார்கள் என்பதை தமிழ்த் திரட்டி மூலம் சட்டென்று தெரிந்து கொள்ள முடியும். வாசிக்க முடியும். தொடர முடியும். அந்தப் பெரும் வெளியில் மனிதர்களின் நடமாட்டத்தைக் கொஞ்சமாவது உறுதி செய்ய முடியும் எனத் தோன்றுகிறது. 


வலைப்பதிவுகள் அதிகமாக இணைய, இணைய, தமிழ்த் திரட்டியை மேலும் மெருகூட்டவும், தொழிநுட்ப ரீதியாக மேம்படுத்தவும் செய்யலாம். உங்கள் ஆலோசனைகளும், ஆதரவும் அதற்கு உரமளிக்கும்.


வலைத்தளப் பதிவர்களையும், வாசகர்களையும் இணைக்கும் ஒரு முயற்சிக்காக நம்பிக்கையோடு அடியெடுத்து வைப்போம்.